உள்ளூர் செய்திகள்
அரியலூருக்கு வந்த அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்
அரியலூருக்கு வந்த அலங்கார ஊர்தியை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
அரியலூர் :
'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி அரியர்லூர் மாவட்டத்துக்கு வருகை தந்தது.
பெரம்பலூர் மானா மதுரை நெடுஞ்சாலையின் மாவட்ட எல்லையான அல்லிநகரம் அருகே வந்த இரண்டு அலங்கார ஊர்திகளை சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மேளதாளம் முழங்க, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அரியலூர் பேருந்துநிலையம் அருகே வந்த ஊர்திகளை மாவட்ட கலெக்டர் ரணசரஸ்வதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர்.
ஒரு ஊர்தியில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகளும், மற்றொரு அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர், காமராஜர், ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு.அய்யர், காயிதே மில்லத், தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, கக்கன் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்றிருந்தன.
இவைகள் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.