உள்ளூர் செய்திகள்
அரியலூர் நகராட்சி சுயேட்சை வேட்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் :
அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்து வருகிறார். இதற்கிடையே நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சி வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மணிவேல் அரியலூர் நகராட்சி 16-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அவர் தனது வீட்டின் கட் மான பணிக்காக செந்துறையில் இரும்புக்கடை வைத்து நடத்தி வரும் ஜாகீர் உசேன் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி இரும்பு கம்பிகளை வாங்கியிருந்தார்.
அதற்கான பணத்தை தருமாறு ஜாகீர்உசேன், மணிவேலிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு வந்த ஜாகீர் உசேனிடம், பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மணிவேல் கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜாகீர்உசேன் அரியலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் விசாரணை நடத்தி, ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 673 ஏமாற்றியதாக மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.
இதையடுத்து அரியலூர் 1-வது குற்றவியல் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிவேலை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சந்திரசேகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணிவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.