உள்ளூர் செய்திகள்
நூல் விலை உயர்வுக்கு கண்டனம்: சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் தறிகள் மூடல்
நூல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 23-ந் தேதி வரை நெசவு தொழிலாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சேலம்:
கைத்தறி நெசவில் புகழ்பெற்ற நகரம் சேலம். இங்கு நெய்யப்படும் பட்டு, பருத்தி நூலிழைகள் தரமானவை. இந்தியாவின் முன்னணி ஜவுளி மையங்களில் ஒன்றாக திகழ்ந்த சேலத்தில் கைத்தறி நெசவும் நூற்பாலைகளும் அதிகம். சேலத்துக்கு பட்டுக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு.
எம்.ஜி.ஆ.ர் நடித்த தனிப்பிறவி படத்தில் இடம்பெற்ற ’சேலத்து பட்டென்று வாங்கி வந்தார், அந்த சின்னவரை போய் கேளும், கண்ணாடி முன் நின்று பாரும்...’என்ற வரிகள் இதன் பெருமையை உணர்த்துகின்றன.
இந்த நிலையில் சேலத்தில் சமீப காலமாக நெசவுத்தொழில் சரிவை சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வால் தறித்தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பட்டு சேலை, பட்டு வேட்டி, துண்டுகளுக்கு தேவையான பட்டு நூல், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது
2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் பட்டு நூல் கிலோ 3,500 ரூபாய் முதல் 3,600 ரூபாய் வரை விற்ற நிலையில் அதன் விலை இரட்டிப்பு நிலையை அடைந்து தற்போது 7,000 ரூபாய் முதல் 7,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு பட்டு ரசங்களின் மேல் ஏற்றப்படுவதால் விற்பனையும் சரிந்துள்ளது.
நூல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 23-ந் தேதி வரை நெசவு தொழிலாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர், சிந்தா மணியூர், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, அம்மாப்பேட்டை, பொன்னம்மா பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் தறிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக சேலம், ஜாரிகொண்ட லாம்பட்டி கைத்தறி சுத்தப்பட்டு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பலராமன் கூறுகையில், நூல் விலை உயர்வால் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதை உணர்த்தவே நாங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.