உள்ளூர் செய்திகள்
வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
வாலாஜா நகரத்தில் உள்ள மண்பரிசோதனை நிலையம், கீழக்கொளத்தூர் நெல் உருளை நேரடி விதைப்பு எந்திரம் மூலமாக நடவு செய்யப்பட்டுள்ள வயல், நிலக்கடலை விதை பண்ணை, நிலக்கடலையின் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.
வெற்றியூரில் ஆமணக்கு விதைப் பண்ணை, தூத்தூர் நேரடி கொள்முதல் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர், விவசாயிகளிடம் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சண்முகம், வேளாண் உதவி இயக்குநர்கள் அரியலூர் சாந்தி, திருமானூர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.