உள்ளூர் செய்திகள்
திலாஸ்பேட்டையில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய கும்பல் தடுக்க முயன்ற தங்கையையும் தாக்கி சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் சிமெண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் என்ற சத்தியசீலன் (வயது29). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பு என்ற மணிகண்டன், நடேசன், துரைராஜ், கார்த்திக் ஆகியோருக்குமிடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மோகன் அங்குள்ள மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த போது ஏற்கனவே அங்கு அப்பு, நடேசன், துரைராஜ், கார்த்திக் ஆகியோர் மது குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது குடிபோதையில் இரு தரப்பினருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மோகன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் ஆத்திரம் தீராத அந்த கும்பல் பின் தொடர்ந்து வந்து மோகனை அவரது வீட்டின் அருகே வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் குத்தினர். இதனால் மோகன் அலறினார்.
இந்த அலறல் சத்தம் கேட்டு அவரது தங்கை அனிதா அந்த கும்பலை தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அனிதாவையும் தாக்கிவிட்டு தப்பி சென்றது.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மோகன் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பு உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.