உள்ளூர் செய்திகள்
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் என்ற இலவச வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்தது.
2021-22ம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஆவாஸ் பிளஸ் தரவுகளில் நிரந்தரக் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஓ.சி., மைனாரிட்டி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பை சார்ந்த பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 515 வீடுகள் ஒதுக்கீடு வரப்பெற்று தகுதியான பயனாளிகளுக்கு தற்போது வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசின் பங்கு தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மாநில அரசின் மேற்கூரை நிதி மற்றும் கூடுதல் நிதி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 90 திறன்சாரா மனித சக்தி நாட்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.273 வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரத்து 570, தனிநபர் இல்லக்கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் என ஒரு வீட்டிற்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 570 வழங்கப்பட உள்ளது.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு பெற பயனாளியின் பெயர் ஆவாஸ் பிளஸ் தரவுகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வீடு கட்ட குறைந்தது 300 சதுர அடி சொந்த நிலம் உடையவராகவும், வேறு இடத்தில் கான்கிரீட் வீடு இல்லாதவராகவும், இதற்கு முன் அரசு திட்டங்களில் வீடு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகளை தேர்வு செய்தாலோ அல்லது தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கிட கையூட்டு ஏதேனும் பெற்றாலோ தொடர்புடைய அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பயனாளிகளை பரிந்துரை செய்திட மூன்றடுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எவரேனும் கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் வரப்பெற்று அப்புகார் நிருபிக்கப்படும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.