உள்ளூர் செய்திகள்
யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்ப கல்வெட்டை படத்தில் காணலாம்.

மேக்களூரில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்ப கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published On 2022-02-01 14:56 IST   |   Update On 2022-02-01 14:56:00 IST
மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்ப கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட குழுவினர் கீழ்பென்னாத்தூர் அருகே மேக்களூர்  நவநீத கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், கீக்களூர் கோவிலில் சம்புவராயர் கால கல்வெட்டும் கண்டறிந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

மேக்களூர் கோவிலில் உள்ள யானைச்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்டமாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது. 

மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானையின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லில் உள்ள யானையின் கீழ் யானையின் பெயரை தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு கீழ் 5 வரியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. 

இக்கல்வெட்டைப் படித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், இந்த யானை சிற்பத்தின் கீழ் உள்ள கல்வெட்டில், ஸ்ரீபுத்தன் புவந திவாகரன் என்பவர் இந்த பட்டத்து யானைக்கு நீலகண்ட ரையன் என்று பெயர் கொடுத்து ள்ளான். இது 10 அல்லது 11-ம் நூற்றாண்டை சேர்ந்த தாகலாம்.  

யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்ட ரையன் என்று எழுதப் பட்டுள்ளது. இது திருவண்ணாமலை பகுதியில் கிடைக்கும் அரிய வகை கல்வெட்டாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் கீக்களூர் சிவன் கோவிலில் கருவறையின் பிற்புறம் உள்ள சுவரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயரின் 2 நிலதானக்கல்வெட்டுகள் உள்ளன. 

இக்கல்வெட்டுகள் சிமெண்ட் பூச்சுகளால் முழுமையற்று உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News