உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் நகராட்சிகளுக்கு 19 பேரும், பேரூராட்சிகளுக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகளுக்கு 19 பேரும், பேரூராட்சிகளுக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை:
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகளுக்கு 19 பேரும், பேரூராட்சிகளுக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இவற்றில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயேட்சைகள், அரசியல் கட்சியினர் என யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.
2&-வது நாளான கடந்த 29-ந் தேதி ஆரணி நகராட்சியில் மட்டும் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்று முன்தினம் அரசு விடுமுறை நாளுக்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
நேற்று அமாவாசை என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் 3 பேரும், ஆரணி நகராட்சியில் 6 பேரும், திருவத்திபுரம் நகராட்சியில் ஒருவரும், வந்தவாசி நகராட்சி 9 பேரும் என 19 பேர் நகராட்சிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பெரமணல்லூர் பேரூராட்சியில் 2 பேரும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 2 பேரும், களம்பூர் பேரூராட்சியில் 2 பேரும், தேசூர் பேரூராட்சியில் ஒருவரும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 2 பேரும், வேட்டவலம் பேரூராட்சியில் 3 பேரும் என 12 பேர் பேரூராட்சிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மீதமுள்ள போளூர், கண்ணமங்கலம், புதுப்பாளையம், செங்கம் ஆகிய 4 பேரூராட்சிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.