உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் ரூ.277.35 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ரூ.19.72 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரூ.17.91 மதிப்பில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் பம்ப் அமைக்கும் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேலும் கட்டடங்களை தரமாக கட்ட வேண்டும் என்று பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து சோளிங்கர் ஒன்றியம் கேசவன்குப்பம் ஊராட்சியில் ரூ.9.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குட்டை 100 நாள் பணியாளர்களை கொண்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், ஜம்புகுளம் மற்றும் கூடலூர் ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் ரூ.1.7 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணி, கூடலூர் ஊராட்சியில் பெரிய ஏரி கால்வாய் ரூ.4.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காங்க்ரீட் தடுப்பணைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது 100 நாள் வேலை பணியில் பணியாளர்கள் வேகமாக வேலை செய்யவும் 8 மணி நேரம் கட்டாயம் பணியாளர்கள் வேலை செய்வதை பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி வீடு வழங்க நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ஒன்றியம் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். பின்னர் ரூ.9.90 லட்சம் மதிப்பில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.என்.பாளையம் ஊராட்சியில் ரூ.8.12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச் சுவர் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் நெமிலி ஒன்றியம் நெடும்புலி ஊராட்சியில் சத்தியமூர்த்தி தெருவில் ரூ.12.86 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையை ஆய்வு செய்தார்.
மேலபுலம் ஊராட்சியில் ரூ.26 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வரண்ட போர்வெல் களில் மழைநீர் சேகரிப்பு நீரை உறிஞ்சி கட்டமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ஆய்வு செய்தார்.