உள்ளூர் செய்திகள்
கவர்னர் தமிழிசை அட்சய பாத்திரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அருகில் முதல்-அமைச்சர் ரங்கசாமி.

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நவீன சமையல் கூடம்

Published On 2022-01-05 14:43 IST   |   Update On 2022-01-05 14:43:00 IST
புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நவீன சமையல் கூடம் திறக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் மதிய உணவு தயாரித்து அளிக்கும் பணியை அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்தது. இதையடுத்து அந்த நிறுவனம் புதுவை லாஸ்பேட்டையில் மைய சமையல் கூடத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. 

இதற்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவற்றின் ஆதரவோடு நவீன சமையல்கூடம் அமைக்கப்பட்டது. இந்த நவீன சமையல்கூட திறப்பு விழா நடந்தது. 

விழாவுக்கு அட்சய பாத்திரம் நிறுவன துணைத்தலைவர் சஞ்சலபதி தாசா தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  பின்னர் மாணவர்க ளோடு அமர்ந்து உணவருந்தினர். 

நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

புதிய சமையல்கூடத்தில் ஒரு லட்சம் மாணவர் களுக்கு உணவு சமைக்க கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை சுத்தமாக கழுவி எந்திரங்கள் மூலம் சுகதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. 

புதுவை பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரத்து 800 மாணவர் களுக்கு இங்கிருந்து உணவு வழங்கப்படும். இங்கிருந்து உணவை சூடாக பரிமாற 40 இன்ஸ்லேட்டர் வாகனங்கள் ஹைட்ராலிக் வசதிகளுடன் இயக்கப்பட உள்ளது. 

இனிப்பு பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், கொண்டைக்கடலை குருமா, உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவை மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.  தொடர்ந்து சாதம், அந்தந்த பருவத்துக்கேற்ப பொரியல், சாம்பார், சுண்டல், தயிர் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நவீன சமையல் கூடத்தை திறந்து வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:&
அட்சய பாத்திரம்  நிறுவனம்  மூலமாக 50 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தூய்மையான உணவு சமைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்தினை அளிக்கும். குழந்தைகளுக்கு கொரோனா காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவு தேவை. ஊட்டச்சத்து உணவு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதற்காக ஒத்துழைப்பு அளித்து வரும் முதல்-அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாராட்டுகிறேன். புதுவை அரசு தற்போது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கி இருக்கிறது குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.

திட்டத்தின் தொடக்க விழா நடந்தாலும், மாணவர்களுக்கு உணவு வழங்கும் பணியை நிர்வாகத்தோடு பேசி அரசு தேதி அறிவிக்கும் என தெரிகிறது.

Similar News