உள்ளூர் செய்திகள்
கொரோனா-: மக்கள் கூடுவதை தடை செய்ய வேண்டும்- அன்பழகன் வலியுறுத்தல்
கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் கூடுவதை தடை செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வந்த 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளதை புதுவை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
புதுவையில் 54 சதவீதத்தினர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். புதுவையில் கொரோனோ வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் அறிவுரைக்கு ஏற்ப புதுவை அரசு செயல்பட வேண்டும்.
கடந்த காலத்தை போல நாள்தோறும் குறைந்தது 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்த வேண்டும். ஒமைக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகளை பெங்களுரூக்கு அனுப்புவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே உருமாறும் மரபணு பரிசோதனைக் கூடத்தை புதுவையில் நிறுவ வேண்டும். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளது. மக்களை காப்பாற்ற புதுவை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். பஸ் நிலையம், மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடை செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.