உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி

புதுச்சேரியில் அலங்கோல ஆட்சி நடக்கிறது- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2022-01-05 03:02 GMT   |   Update On 2022-01-05 03:02 GMT
என்.ஆர்.காங்.- பா.ஜ.க. இடையே கருத்து வேறுபாட்டால் புதுச்சேரியில் அலங்கோல ஆட்சி நடக்கிறது என்று நாராயணசாமி கூறினார்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த விழிதியூர் தி.மு.க. பிரமுகர் சரவணன் பட திறப்பு விழா நடந்தது. இதில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற நாள் முதல், காரைக்கால் மாவட்டத்தை இதுவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதுதான் ஒரு முதல்-அமைச்சர் காரைக்கால் மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். ரங்கசாமி தனது பணிகளை செயல்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

புதுச்சேரியில் நல்லதோர் ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் இடையே உள்ள கருத்து வேறுபாட்டால், மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அலங்கோல ஆட்சி நடக்கிறது.

ரங்கசாமி தனது பணிகளை செய்ய விடாமல் கவர்னர் தடுக்கிறார். முதல்-அமைச்சரின் உத்தரவுகளை அவர் அறிவிக்கிறார்.

கவர்னரின் இந்த செயலை ரங்கசாமி தட்டிக்கேட்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. அவர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் விட்டுக் கொடுத்து விட்டாரா? அல்லது இந்த அமைச்சரவை, கவர்னரிடம் சரண் அடைந்துவிட்டதா? என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ரங்கசாமி தனது அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, சரணாகதி அடைந்திருப்பது கண்டனத்திற்குரியது.

புதுச்சேரி, காரைக்காலில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ கவலை கொள்வதாக தெரியவில்லை. தற்போது 3-வது அலையாக ஒமைக்ரான் வந்துள்ளது. இது டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த மாதம் (பிப்ரவரி) இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

புதுச்சேரியில் ஒமைக்ரான் அதிகரிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியது தான் முக்கிய காரணம். இனியாவது தீவிர பணியாற்றி மக்களை காக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, கண்ணன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News