உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் முகக்கவசம்-சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேர் மீது வழக்கு

Published On 2022-01-03 13:59 GMT   |   Update On 2022-01-03 13:59 GMT
ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் முகக்கவசம்-சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

கொரோனா எனும் கொடிய நோய் தொற்றின் மறு உருவமாக ஓமைக்ரான் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இதேபோல் புதுவையிலும் ஓமைக்ரான் தலை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் ஓமைக்ரான் தொற்றை தடுக்கும் விதமாக சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் படி புதுவை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு மறைமலை அடிகள் சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

புதுவை பஸ் நிலையம் அருகே இரவு நேர ஊரடங்கை மீறி ஓட்டலில் ஒருவர் டிபன் விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

எனவே ஓட்டல் உரிமையாளரான முத்தரையர் பாளையத்தை சேர்ந்த முரளி (வயது33) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் முத்தியால்பேட்டை போலீசார் டி.வி.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்த வித அத்தியாவசிய தேவையுமின்றி முகக்கவசம் அணியாமல் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (23)என்பவர் சுற்றிக்கொண்டிருந்தார்.அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுவை பிரியதர்ஷினி நகர் பகுதியில் ஓதியஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளியே கடைபிடிக்காமலும்,முகக்கவசம் அணியாமலும், கொரோனா தொற்றை பரப்பும் விதமாகவும் நின்று கொண்டிருந்த கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த பிரதாப் (24) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் சேதராப்பட்டு போலீசார் மயிலம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஓட்டலில் சமூக இடைவெளியே கடைபிடிக்காமலும்,முக கவசம் அணியாமலும் உணவு பரிமாறிக்கொண்டிருந்த மயிலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் (38) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாகூர் போலீசார் சோரி யாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடலூரை சேர்ந்த பிரவீன் ராஜ் (31), ரவிக்குமார் (21)ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் முகக்கவசம் அணிமாமல் தொற்று பரப்பும் வகையில் சுற்றிக்கொண்டிருந்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் கோரிமேடு மகாத்மா நகர் பகுதியில் சிக்கன் கடையில் சமூக இடைவெளியே கடைப்பிடிக்காமல் கூட்டம் அதிகமாக நின்றது.

இதனால் கடை உரிமையாளரான கோட்டக்குப்பத்தை சேர்ந்த யாசின் (30)என்பவர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திருக்கனூர் பகுதியில் கே.ஆர்.பாளையம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவர் நடத்தி கொண்டிருந்த சிக்கன் பக்கோடா கடையில் சமூக இடைவெளியே கடை பிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து கடை உரிமையாளர் மீது திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News