உள்ளூர் செய்திகள்
புதுவை காவல்துறையில் பணிபுரியும் போலீசார் 121 பேருக்கு பதவி உயர்வு ஆணையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழ

புதுவையில் 1000 போலீசார் இந்த ஆண்டு தேர்வு: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Published On 2022-01-03 15:30 IST   |   Update On 2022-01-03 16:03:00 IST
புதுவையில் இந்த ஆண்டு 1000 போலீசார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை உள்துறை நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை காவல்துறையில் பல்வேறு பதவிகளில் 163 பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இப்போது இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

‘ஆபரேஷன் விடியல்’ என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்தோம். இதில் 88 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க ‘ஆபரேஷன் திரி சூலம்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் முடிவடையும். போலீசாருக்கு சீருடை படி இந்த ஆண்டு வழங்கியுள்ளோம்.

3 ஆண்டு நிலுவைத் தொகையும் வழங்க முதல்-அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி 20-ந்தேதிக்குள் 390 காவலர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடத்தப்படும். முதல் கட்டமாக இத்தேர்வு நடக்கும். 2-ம் கட்டமாக 300 காவலர்களை தேர்வு செய்வதற்கான தேர்வும், 400 ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு என இந்த ஆண்டில் மொத்தம் 1000 காவலர் பணிக்கு தேர்வு நடத்தப்படும். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நேரடியாக தேர்வு நடைபெறவில்லை. 47 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளோம். 

இந்த அனுமதி வந்தவுடன் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு நடத்தப்படும். காவலர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இவை அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Similar News