உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

மூலக்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2022-01-01 14:58 IST   |   Update On 2022-01-01 14:58:00 IST
மூலக்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

மூலக்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி

வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜசேகர்(வயது36). திருமணமானவர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை ராஜசேகர் புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். மூலக்குளத்தில் தனியார் கார் ஷோரூம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜசேகர் ஓட்டி சென்ற மோட்டர் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலை நசுங்கி பலத்த காயமடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராம்குமார்(வயது34). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தார்.

அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராம்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கிவீசபட்ட ராம்குமார் தலை மற்றும் உடலில் பலத்தகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராம்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது சகோதரர் சிவசக்திவேல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News