உள்ளூர் செய்திகள்
கண்ணாடியை கையால் உடைத்த வாலிபர் பரிதாப பலி

சிகிச்சை அளிக்க காலதாமதமானதால் ஆஸ்பத்திரி கண்ணாடியை கையால் உடைத்த வாலிபர் பரிதாப பலி

Published On 2022-01-01 14:02 IST   |   Update On 2022-01-01 14:02:00 IST
விபத்தில் காயமடைந்தற்கு சிகிச்சை அளிக்க காலதாமதமானதால் ஆஸ்பத்திரி கண்ணாடியை கையால் உடைத்த வாலிபர் நரம்பு துண்டித்து பரிதாபமாக இறந்து போனார்.
திருபுவனை:

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் ரமணாநகரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் அரசு (வயது22). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அரசுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனே அவரை நண்பர்கள் திருபுவனையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகியோர் அரசுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு அங்கிருந்த ஆஸ்பத்திரி கண்ணாடியை கையால் குத்தினார்.

இதில் நரம்பு துண்டித்து ரத்தம் சரமாரியாக கொட்டியது. ஆனால் இதனை அறியாமல் அரசு அங்கேயே இருந்ததால் மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அரசுவை மீட்டு கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை கேசவன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News