உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன் தடுப்பூசி - புதுச்சேரி மக்களுக்கு, துணை நிலை ஆளுநர் கோரிக்கை

Published On 2021-12-21 19:06 IST   |   Update On 2021-12-21 19:06:00 IST
புதுச்சேரியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் 2வது அலை  காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. 2022  ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனினும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஊரடங்கில் முழு தளர்வு அளித்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகிறது. பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார். 
அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரி ஒரு சுற்றுலா தலமாக இருந்தாலும், கடுமையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை இங்கு அனுமதித்துள்ளோம். வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுகிறோம். புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு தமது பேட்டியின்போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Similar News