உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

விருதுநகரில் தோட்டத்தில் பதுக்கிய வெடிகுண்டுகள் சிக்கியது- 2 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2021-12-11 05:12 GMT   |   Update On 2021-12-11 05:12 GMT
வக்கீல் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கும், விருதுநகர் தோட்டத்து பராமரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர், வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த கருப்பசாமி, வீரமல்லன் உள்பட 4 பேர் புல்லலக் கோட்டையில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கீழ் இயங்கும் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தியாகபிரியன் தலைமையிலான போலீசார் அந்த தோட்டத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு வக்கீல் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது தான் விருதுநகரில் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சோதனை நடத்தி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

எனவே வக்கீல் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கும், விருதுநகர் தோட்டத்து பராமரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே தோட்ட குத்தகைதாரர்கள் கருப்பசாமி, வீரமல்லன் ஆகியோருக்கும், சிலருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

எனவே தேர்தல் முன் விரோதத்தில் யார் மீதாவது வீசுவதற்கு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்தும் விருதுநகர் புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News