உள்ளூர் செய்திகள்
பணம் கேட்டு மிரட்டிய பெங்களூர் பெண்

முதலியார்பேட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய பெங்களூர் பெண்

Published On 2021-12-06 10:22 GMT   |   Update On 2021-12-06 10:22 GMT
முதலியார்பேட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய பெங்களூர் பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை தில்லைநகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி சுலோச்சனா (வயது80). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெங்களுரில் தங்கி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ராஜாமணி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

சம்பவத்தன்று சுலோச்சனா தனது மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது பெங்களூரை சேர்ந்த தமயந்தி சவுமியா என்ற பெண் சுலோச்சனாவின் மகனை பார்க்க வந்தார். அந்த பெண் சுலோச்சனாவிடம் உனது மகன் பெங்களுருக்கு ஏன் வரவில்லை என்று கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் உனது மகன் என்னிடம் பழகி ஏமாற்றி விட்டார். எனவே இந்த வீட்டை விற்று எனக்கு பணம் கொடுங்கள். இல்லையெனில் போலீசில் புகார் கூறுவேன். உடனடியாக தனக்கு ரூ.1லட்சம் கொடுக்க வேண்டும்.

மேலும் நான் புதுவைக்கு வரும்போதெல்லாம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் அடுத்த முறை வரும்போது வி‌ஷத்தை கொண்டு வந்து இங்கேயே சாப்பிட்டு என் சாவுக்கு நீங்கள்தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று சுலோச்சனாவை தமயந்தி சவுமியா மிரட்டினார்.

மேலும் உனது மகன் என்னுடன் உடனடியாக பெங்களூர் வரவேண்டும் இல்லாத பட்சத்தில் என்னிடம் பழகிய போது உனது மகன் எவ்வளவு பணம் செலவு செய்தாரோ அதுபோன்று மாதாமாதம் தனக்கு பணம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் பெங்களூரில் ஒரு வீட்டை போகியம் எடுத்து தான் தங்குவதற்கு தேவையான ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை தரவேண்டும் என தொடர்ந்து 4 மணி நேரம் சுலோச்சனாவிடம் தமயந்தி சவுமியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதோடு சுலோச்சனா விடமிருந்து ரூ.5 ஆயிரத்தை கூகுல்பே மூலம் தமயந்தி சவுமியா பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமயந்தி சவுமியா போனில் சுலோச்சனாவை மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து சுலோச்சனா முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News