உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர் - முத்தியால்பேட்டை பகுதி மக்கள் மறியல்

Published On 2021-12-06 10:15 GMT   |   Update On 2021-12-06 10:15 GMT
முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மணிக்கூண்டு அருகே திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் முத்தைய முதலியார் வீதி, விஸ்வநாதன் நகர், அங்காளம்மன் நகர், சோலைநகர், சாலைத்தெரு உட்பட பல பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டது.

வழக்கமாக மழைக்காலத்துக்கு முன்பு வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும். இதனால் மழைநீர் கால்வாய்களில் வடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு கால்வாய்களை துவர்வாரததால் பல இடங்களில் மழைகாலத்தில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மழை நின்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மணிக்கூண்டு அருகே திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் வந்தால்தான் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இதையேற்று மறியலை கைவிட்ட மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தங்கள் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று கழிவுநீர் சாலைகளில் ஓடும் இடங்களை காட்டினர். அதிகாரிகள் பொதுமக்கள் காட்டிய இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News