உள்ளூர் செய்திகள்
கைது

பொது இடத்தில் ஆபாசமாக பேசியதை கண்டித்த போலீசார் மீது தாக்குதல் - 2 பேர் கைது

Published On 2021-12-06 10:08 GMT   |   Update On 2021-12-06 10:08 GMT
வில்லியனூரில் பொது இடத்தில் ஆபாசமாக பேசியதை கண்டித்த போலீசாரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணிபுரியும் யுவராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் வில்லியனூர் கோட்டைமேடு ரோட்டில் ரோந்து பணி சென்றனர்.

அப்போது அங்குள்ள மதுக்கடை எதிரே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 2 பேர் மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தனர்.

இதனை போலீசார் கண்டித்து அவர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தள்ளி விட்டனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரித்த போது அவர்கள் கண்டமலங்கலம் அருகே சடையாண்டிக்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர்(35) மற்றும் அதேபகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(34) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொது இடத்தில் அருவருக்கத்தக்க வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும், போலீசாரை பணி செய்யவிடாமல் அவர்களை தாக்க முயன்றதாக வழக்குபதிவு செய்து ஸ்ரீதர், ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News