உள்ளூர் செய்திகள்
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த விவசாயி காளியப்பன்.

விருதுநகர் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி

Published On 2021-12-06 05:25 GMT   |   Update On 2021-12-06 05:25 GMT
விருதுநகர் பகுதியில் நேற்று பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. ஆனாலும் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் விருதுநகர் பகுதியில் நேற்று பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி பலியானார். அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 85). விவசாயியான இவரது மகன்கள் மதுரையில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக காளியப்பன் செங்கோட்டையில் தனியாக வசித்தார்.

சில நாட்களுக்கு முன்பு காளியப்பன் மதுரையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று ஊருக்கு திரும்பினார். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு காளியப்பன் வீட்டில் தூங்கினார்.

தொடர் மழை காரணமாக ஏற்கனவே அவரது வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பெய்த மழையில் சுவர் மேலும் பலவீனம் அடைந்து நள்ளிரவு நேரத்தில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காளியப்பன் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி காளியப்பன் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News