உள்ளூர் செய்திகள்
பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்காக மிதவை ஜெட்டி அமைக்கும் பணி நடப்பதை காணலாம்

சுண்ணாம்பாற்றில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது

Published On 2021-12-06 03:07 GMT   |   Update On 2021-12-06 03:07 GMT
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுண்ணாம்பாற்றில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து செல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரியாங்குப்பம்:

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. மேலும் தமிழக பகுதியில் உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு சில படகுகள் ஆற்றில் மூழ்கியதால் என்ஜின் பழுதானது. பாரடைஸ் பீச்சில் பயணிகளை இறக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மழை ஓய்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் படகுசவாரி தொடங்கியது. பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு அழைத்து செல்லப்படவில்லை.

மாறாக ஆற்றிலேயே சுற்றி காண்பிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே பாரடைஸ் பீச்சில் 2 ஜெட்டிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தான் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News