செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காட்சி.

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை - குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-11-28 22:49 GMT   |   Update On 2021-11-28 22:49 GMT
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளம் தொடர் மழையால் நிரம்பி காணப்படுகிறது.

மேலும் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை பகுதிகளில் நேற்று பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. குற்றாலத்திலும் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது.

குற்றாலம் பஜாரிலும், பழைய குற்றாலம் செல்லும் படிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

மீன்வளத்துறை ஏற்பாட்டில் சிறிய தெர்மாகோல் படகில், பண்ணை பசுமை காய்கறி கடை பணியாளர்கள் காய்கறி பைகளை எடுத்து சென்றனர். அவர்கள் ரூ.100-க்கான காய்கறிகள் தொகுப்பை விற்பனை செய்தனர். இதே போன்று மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்த படகை பயன்படுத்தி வெளியிலும் வந்து சென்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதையொட்டி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News