செய்திகள்
ஓ. பன்னீர்செல்வம்

‘அம்மா மினி கிளினிக்’ பெயர் மாற்றம்: கடும் நடவடிக்கை எடுக்க ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2021-11-28 08:12 GMT   |   Update On 2021-11-28 08:12 GMT
அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பது வரு மாறு:-

சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, முதல் அமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர்க் பலகை வைத்ததோடு அந்த பெயர்ப் பலகையில் தற்போதைய முதல் அமைச்சர் மற்றும் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளி வந்துள்ளது.

இது தொடர்பாக புகார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெயர்ப் பலகையை மாற்றவோ, பெயர்ப் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு ஆணை இல்லாமல், அந்தத்துறை தொடர்புடைய அதிகாரிகளின் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.

அரசாங்க அலுவலகத்தில் உள்ள பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகளின் இசைவு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதுதான் பொருள்.

மேற்படி இடத்தில், ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பலகை முதல் அமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்தப் பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்திற்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அம்மாவின் திருவுருவப் படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே முதல் அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் ஜெயலலிதா திருவுருவப்படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News