செய்திகள்
தமிழக அரசு

38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்- அரசாணை வெளியீடு

Published On 2021-11-26 06:15 GMT   |   Update On 2021-11-26 09:50 GMT
ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.75.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, பெண்கள், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பயனாளிகளில் குறைந்தது 30 சதவீதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.



குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags:    

Similar News