செய்திகள்
திருப்பூர் - தாராபுரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர்.
தாராபுரம்:
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் சிக்கண்ணாஅரசு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணமான ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேப்போல் - தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடினர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கோவை பள்ளி மாணவி தூக்கிட்டு இறந்ததற்கு நீதி கேட்டு போராட வந்துள்ளோம் என கூறியதை அடுத்து போலீசார் தாராபுரம் அண்ணா சிலை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு கூடி பதாகை ஏந்தி தூக்கிலிட்டு இறந்த மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் ,
பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக என தனி சட்டம் கொண்டு வர வேண்டும். மாணவி சாவில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி உடனடியாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர்.
தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், செல்லையா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.