செய்திகள்
கொலை செய்யப்பட்ட அசோக்குமார்

கோவையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்ட கட்டிடத் தொழிலாளி கொலை

Published On 2021-11-06 09:00 GMT   |   Update On 2021-11-06 09:00 GMT
சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போட்டோ வெளியிட்ட கட்டிட தொழிலாளியை வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கவுசல்யா (24) என்ற மனைவியும், நித்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.

இவருக்கும் பக்கத்து தெருவை சேர்ந்த ஒர்க்ஷாப் மணி, விக்கு என்கிற சண்முகம் ஆகியோருக்கும் இடையே இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக்குமார் அரிவாளை முதுகில் வைத்தபடி புகைப்படம் எடுத்து எங்க ஏரியாவில் வந்து போட்டு பாருங்க என வசனத்துடன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனை பார்த்த ஓர்க்ஷாப் மணி, விக்கு சண்முகம் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு ஏற்கனவே ஒர்ஷாப் மணி அவரது நண்பர் விக்கு சண்முகம், சிவா, பாபு ,அமர்நாத் ஆகியோர் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் அசோக்குமாரிடம் எதற்காக இப்படி புகைப்படம் பதிவிட்டாய் என கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அசோக்குமார் காந்தி மாநகரில் உலகளந்த பெருமாள் கோயில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒர்க்ஷாப் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சண்முகம் சிவா, பாபு, அமர்நாத் ஆகியோர் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அசோக்குமாரை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.

இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த 5 பேரும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அசோக்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அசோக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போட்டோ வெளியிட்ட கட்டிட தொழிலாளியை வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News