செய்திகள்
மழை

அடைமழையால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2021-10-06 02:47 GMT   |   Update On 2021-10-06 02:47 GMT
புதுச்சேரியில் அடை மழை காரணமாக வீடுகளில் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி நேற்று அதிகாலை முதல் புதுவையில் மழைதூற தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பகல் வேளையில் சரசரவென மழை கொட்டியது.

சிறிதுநேரம் கூட இடைவெளி இல்லாமல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

சாலைகளில் உருவாகி இருந்த திடீர் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள முதலியார்பேட்டை கடலூர் சாலை மேலும் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது.

பகல் முழுவதும் இடைவிடாது அடைமழை பெய்துகொண்டே இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடை பிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.

இடைவிடாத மழை காரணமாக நேற்று பகல் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30மணி வரை புதுவையில் 1.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News