செய்திகள்
டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்

Published On 2021-10-03 02:42 GMT   |   Update On 2021-10-03 02:42 GMT
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலதாமத சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. டெங்குவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெங்கு என்பது உலக அளவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு நாட்டில் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவது வழக்கம். டெங்கு என்பது ஏடிஸ் ஈகிப்ட் வகை கொசுக்களால் பரவும் வைரஸ் நோயாகும். ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை சுத்தமான நீர் தேக்கத்தில் கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. மழையின்போது பிளாஸ்டிக் தேனீர் கப்புகள், அலுமினிய நகர்வு ஜன்னல்களில் அடிப்பாகம் விளிம்புகளில், பறவை தண்ணீர் தட்டுகளில், தொழிற்சாலைகளில் உள்ள உபகரணங்களில், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் சுத்தமான தண்ணீர் ஒரு வாரத்துக்கு மேல் தேங்குவதால் டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசு உருவாக வாய்ப்பு உள்ளது.

டெங்கு காய்ச்சல் சாதாரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் சரியாகிவிடும். அடுத்த நிலையில் தலைவலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி ஏற்படும்.

காய்ச்சல் விட்ட பிறகு நமக்கு நன்றாகிவிட்டது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி பாதிப்புகளை உடலில் நாம் உணராத வகையில் டெங்கு உருவாக்குவதால், காலதாமத சிகிச்சையால் உயிர்பலி ஏற்படுகிறது.

டெங்கு பரவுவதை தடுக்க தீவிரப்படுத்தப்பட்ட கொசுப்புழு மற்றும் புகை மருந்து தெளிப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக இந்த நோய் மனித குலத்தை தாக்காமல் தடுக்கலாம். இந்த நோயை தடுக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News