செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழைநீர் தேங்கி சேதமடைந்த சாலை
ஜெயங்கொண்டம் அருகே வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது. மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில், நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட காமிட்டி அம்மன் கோவிலுக்கு பின்புறம் பால்வாடி மேலத்தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை, நீர் வரத்து வாய்க்கால் இல்லாமல் அமைக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் சென்றதால், சாலை சிதிலமடைந்து தற்போது நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதுடன், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் தருவாயில் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சாலையின் 2 பக்கங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து காமிட்டி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு குழாய் பாலமும், ஜெயங்கொண்டம்-மணக்கரை சாலையில் இருந்து பால்வாடி தெருவுக்கு பிரியும் பிரிவு சாலையில் ஒரு குழாய் பாலமும் அமைத்து, சாலையை உயர்த்தி, தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று மணக்கரை பால்வாடி தெரு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.