செய்திகள்
தற்கொலை

புதுவை லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-01 07:40 GMT   |   Update On 2021-10-01 07:40 GMT
புதுவை லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் கோவில் வீதி- லில்லி லொலான் வீதி சந்திப்பில் தனியார் தங்கும் விடுதி (லாட்ஜ்) உள்ளது.

நேற்று காலை இந்த விடுதிக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் கனகாம்புதூர், மோகன்ராஜ் (வயது 30) என்ற முகவரியை கொடுத்து விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

மோகன்ராஜூடன் வந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவரது கழுத்தில் தாலி கயிறு இருந்தது.

காலையில் விடுதியை விட்டு வெளியே சென்ற இவர்கள் புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் விடுதி திரும்பினர்.

இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மின் விசிறியில் மோகன்ராஜ் கயிற்றால் தூக்குப்போட்டும், அவருடன் வந்த பெண் போர்வையால் தூக்குப்போட்டும் பிணமாக தொங்குவதை கண்டனர்.

மோகன்ராஜின் சட்டை பையில் காட்பாடியில் இருந்து சென்னை வந்ததற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. இவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News