செய்திகள்
கைது

சாமி சிலைகள் கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2021-09-24 02:48 GMT   |   Update On 2021-09-24 02:48 GMT
திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இந்திரஜித் என்ற இப்ராகிம் (வயது 46), அவரது நண்பர்கள் நேரு (45), செல்வம் (44) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கோர்ட்டு விசாரணையின் போது ஆஜராகாமல் இந்திரஜித் தலைமறைவானார். தொடர்ந்து வழக்கை காரைக்கால் மாவட்ட கோர்ட்டு விசாரித்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து குற்றவாளிகள் நேரு, செல்வம் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் இந்திரஜித் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்பேரில் காரைக்கால் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்திரஜித் மன்னார்குடியில் இரும்புக் கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மன்னார்குடி சென்று இந்திரஜித்தை கைது செய்தனர். பின்னர் அவர் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News