செய்திகள்
கொள்ளை

புதுவை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை

Published On 2021-09-14 11:14 GMT   |   Update On 2021-09-14 11:14 GMT
புதுவை வில்லியனூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 10ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுவனம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி அந்த தொகையை வசூல் செய்வது வழக்கம்.

இந்த நிதி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரபா மானேஜராக உள்ளார். மேலும் உதவி மேலாளராக ஷேமளா உள்பட 8 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிதி நிறுவனம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

கடந்த 8-ந் தேதி முதல் நிதி நிறுவன மேலாளர் ஜெயபிரபா விடுமுறையில் இருந்து வந்தார். இதனால் உதவி மேலாளர் ஷேமளா நிர்வாக பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

கடந்த 9-ந் தேதி மற்றும் 11-ந் தேதி வசூலான ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 750-ஐ அன்று இரவு உதவி மேலாளர் ஷேமளா நிதி நிறுவன அலுவலக லாக்கரில் வைத்துபூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் திறக்கப்படவில்லை.

நேற்று காலை உதவி மேலாளர் ஷேமளா மற்றும் துப்புரவு பணியாளர் சத்யா ஆகியோர் நிதி நிறுவனத்தை திறக்க வந்தனர். அப்போது நிதி நிறுவன முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த மொத்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். மேலும் நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகும் புட்டேஜ் பாக்சையும் காணவில்லை.

மர்மநபர்கள் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு நிதி நிறுவன பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தை கண்டுபிடிக்காமல் இருக்க அவர்கள் சி.சி.டி.வி. கேமரா புட்டேஜ் பாக்சையும் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் ஜெயபிரபா கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எந்த நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் மர்மநபர்கள் துணிகரமாக நிதி நிறுவன பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News