ஜெயங்கொண்டத்தில் டீக்கடைகாரர் வீட்டு பூட்டை உடைத்து பணம்-நகை கொள்ளை
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அரசு பாங்க் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர் ஜெயங்கொண்டத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது சொந்த வீடு ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் கண்ணன் உட்கோட்டை கிராமத்தில் அவருடைய உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு குடும்பதோடு போனதாகவும் அங்கே இரவு தங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள கண்ணன் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து கண்ணன் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். விசாரணையில் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.