செய்திகள்
போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி அரசு ஆவணங்கள் தயாரித்த கணவன்-மனைவி கைது
போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி அரசு ஆவணங்கள் தயாரித்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் சிலர் போலியாக அரசு ஆவணங்கள் தயாரித்து கொடுப்பதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் எம்.ஜி.நகர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள ஜெராக்ஸ் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கடையில் வேலை செய்யும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி, அவரது கணவர் பாலாஜி மற்றும் சிலர் போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி அரசு ஆவணங்களை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஜெராக்ஸ் கடை மற்றும் நந்தினியின் வீட்டில் சோதனை செய்ததில் பத்திரப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் போலி பத்திரங்கள், போலி அரசு முத்திரைகள், போலி அரசு ஆவணங்கள் மற்றும் நிலம் சம்பந்தமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி அரசு முத்திரை மற்றும் போலி ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருந்ததாக ஊரப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி (வயது 29), அவரது கணவர் பாலாஜி (50) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தண்டாயுதபாணி (51), தனசேகரன் (44), ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.