செய்திகள்
கைது

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2021-08-24 20:53 IST   |   Update On 2021-08-24 20:53:00 IST
மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்து 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ், மெய்யூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மீனவரான இவரது மகன் புகழேந்தி என்பவருக்கு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சீட்டு வாங்கி தருவதாக சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.எம்.ஆர்.மதன் (வயது 36) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.45 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மருத்துவச்சீட்டு வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சேகர் பலமுறை மதனிடம் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். அந்த பணத்தை தராமல் மதன் ஏமாற்றி வந்துள்ளார். இந்த சம்பவத்தால் சேகரின் மகனான புகழேந்தி டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த மோசடி தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 3 ஆண்டுகளாக மதனை தேடி வந்தனர். இந்நிலையில் மதன் சென்னை அடையாரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அங்கு சென்று தலைமறைவாக இருந்த மதனை நேற்று கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி 15 நாள் கோர்ட்டு காவலில் மதனை அடைக்க உத்தரவிட்டதன் பேரில், செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Similar News