செய்திகள்
மழை

புதுவையில் கனமழை- சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது

Published On 2021-08-21 04:20 GMT   |   Update On 2021-08-21 04:20 GMT
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
புதுச்சேரி:

தமிழகம்-புதுவையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

ஆனால் புதுவையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆங்காங்கே லேசான மழை மட்டுமே பதிவானது. ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன்படி புதுவையில் இன்று அதிகாலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. காலை 6 மணியவில் பயங்கர இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது.

தொடர்ந்து 6.15 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கியது.

நகர பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை, அஜந்தா சிக்னல், புஸ்சி வீதி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மேகம் இருண்டு வானம் மூடி காணப்படுவதால் இருள் சூழ்ந்துள்ளது.
Tags:    

Similar News