செய்திகள்
காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் - வனத்துறைக்கு, விவசாயிகள் கோரிக்கை
காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என்று வனத்துறைக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலேயே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வனவிலங்கு-மனித மோதல் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது.
கேரள வனத்தில் இருந்து கூடலூர் வழியாக முதுமலை, சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து செல்கிறது. அப்போது காட்டுயானைகள் கூடலூர் பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதை தடுக்கக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனப்பகுதியில் பார்த்தீனியம், உண்ணி செடிகளின் அதிகமாக உள்ளதால் பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாய பயிர்களை தேடி காட்டுயானைகள் வருகிறது. இதை தடுக்க முயலும்போது மனிதர்களுக்கும், காட்டுயானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காட்டுயானைகளுக்கு தேவையான பசுந்தீவனங்களை வனப்பகுதியில் பூர்த்தி செய்தால் மட்டுமே அவை ஊருக்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு தீர்வு காண அதிகாரிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பை சேர்ந்த தனிக்குழு அமைத்து வனப்பகுதியை ஆராய வேண்டும். தொடர்ந்து வனப்பகுதியில் பசுந்தீவனத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உள்ளனர்.