செய்திகள்
தற்கொலை

கடன் பிரச்சனையால் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2021-08-06 11:42 IST   |   Update On 2021-08-06 11:42:00 IST
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மோகன் (வயது 35). இவரது மனைவி ரம்யா (32). இவர்களுக்கு அன்மயா (9) என்ற மகள் உள்ளனர்.

இந்த நிலையில் மோகனுக்கு சொந்தமான லாட்ஜ் கிருஷ்ணகிரியில் இருந்தது. கடன் தொல்லை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதை விற்று விட்டார். இதையடுத்து மோகன், மத்திகிரிக்கு குடும்பத்தினருடன் வந்து, ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதில் அவருக்கு லட்சக்கணக்கில் கடன் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதில் மோகன் மன உளைச்சலுக்குள்ளாகி வேதனையுடன் இருந்து வந்தார். மேலும் குடும்பம் நடத்தவும் வருமானம் இல்லாமல் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடன் தொல்லை அதிகமாகி வந்ததால், குடும்பத்துடன் மோகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு மோகன், மனைவி ரம்யா, மகள் அன்மயா மற்றும் தாயார் வசந்தம்மா (60) ஆகியோருக்கு வி‌ஷம் கொடுத்தார். இதில் சிறிதுநேரத்தில் அவர்கள் 3பேரும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் 3 பேரும் இறந்ததை உறுதி செய்ய மோகன், வீட்டில் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை நீண்ட நேரமாக மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ரம்யா, அன்மயா , வசந்தம்மா ஆகியோர் வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்ததையும். மோகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மோகன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News