செய்திகள்
ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

ஜனாதிபதி வருகை - நீலகிரி மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்

Published On 2021-08-01 09:25 GMT   |   Update On 2021-08-01 09:25 GMT
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி:

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நாளை சென்னை வருகிறார். நாளை மாலை சென்னை சட்ட சபையில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் ஜனாதிபதி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை சிறப்பு விமானம் மூலம் கோவை வருகிறார். கோவையில் இருந்து ஹெலிகாப்படரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு செல்லும் அவர் அன்று முழுவதும் அங்கு ஓய்வெடுக்கிறார்.

4-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்து ஓய்வெடுக்கிறார். 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஒய்வெடுக்கும் அவர் 6-ந் தேதி கோவை வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி செல்லும் சாலை ஒரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றும் பணி, ராஜ்பவன் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஊட்டியில் 4 நாட்கள் தங்க உள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராமம் மற்றும் தேயிலை தோட்டத்தை பார்வையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அதிகாரிகள் ஒரு சில கிராமங்களை தேர்வு செய்து வைத்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதி ஹெலிகாப்படரில் வந்திறங்கும் ஊட்டி தீட்டுக்கல் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. அதை சுற்றிலும் புதர்கள் அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் தினந்தோறும் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் வந்திறங்கும் ஒத்திகை நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 500 போலீசார், உள்ளூர் போலீசார் என மொத்தம் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதையும் கண்காணிக்கின்றனர்.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி உள்பட அனைத்து எல்லை களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News