செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

Published On 2021-07-23 05:15 GMT   |   Update On 2021-07-23 05:15 GMT
அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, ஜூலை 1-ந் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி என 3 தடவை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதனால், இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன், மேற்கண்ட 3 தவணைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்தநிலையில் 3 தவணை அகவிலைப்படி உயர்வையும், ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதேபோல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் உயரும்.
Tags:    

Similar News