செய்திகள்
மாணவி ஒருவருக்கு சிறப்பூதியத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கியபோது எடுத்தபடம்

குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது கொரோனா 3-வது அலையின் தாக்கம் அல்ல- கவர்னர் விளக்கம்

Published On 2021-07-17 03:23 GMT   |   Update On 2021-07-17 03:23 GMT
குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கவர்னர் மாளிகை முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் இந்த நேரத்தில் நாம் டெங்கு, மலேரியா போன்றவற்றையும் மறந்துவிடக்கூடாது. நம்முடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் 80 சதவீதம் நோய்களை தடுத்துவிட முடியும்.

புதுவையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் குழந்தைகள் அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. அது உண்மை அல்ல. பொதுவாக மழைக்காலங்களில் நோய்த்தொற்றுகள் அதிகமாக வரும். எனவே இதை 3-வது அலையின் தொடக்கம் என்று கருத முடியாது.

சுகாதாரத்துறையின் முயற்சி காரணமாக குழந்தைகள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளை பாதுகாப்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

குழந்தைகளை வெளியில் அதிகம் கூட்டிச்செல்வதையும், உறவினர்களை வீட்டிற்கு அழைப்பதையும் தவிர்க்கவேண்டும். பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவுகள், மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன.

பள்ளிக்கூடங்களை திறக்கலாம் என்று தொடக்கத்தில் தீர்மானிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றை திறப்பதற்கான தேதியை முதல்-அமைச்சர் மாற்றி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

புதுவையில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ந்தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய துணை மருத்துவக்கல்வி மாணவர்களை பாராட்டி கோரிமேடு அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 119 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சிறப்பூதியத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கொரோனா பொறுப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை செயலாளர் அருண், அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மைய புலமுதல்வர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News