செய்திகள்
புதுவை அரசு

புதுவை சபாநாயகர் 16-ந்தேதி தேர்வு: சட்டசபை செயலகம் அறிவிப்பு

Published On 2021-06-12 10:16 GMT   |   Update On 2021-06-12 10:16 GMT
தேர்தல் முடிவு வெளியாகி 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று புதுவை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியின் முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றும், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி ஏற்பட்டதாலும், ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் அமைச்சர்கள் பதவியேற்பு காலதாமதமானது.

பா.ஜனதா மேலிடத்திடம் ரங்கசாமி நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். இதில் பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர், என்.ஆர்.காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் தவிர்த்து 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் என பங்கீடு முடிவடைந்தது.

ஆனாலும், பா.ஜனதா மேலிடம் அதிகாரப்பூர்வமாக அமைச்சர்கள், சபாநாயகர் பதவிக்குரியவர்களை பரிந்துரை செய்யவில்லை. இதனால் பதவியேற்பு மேலும் தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று பா.ஜனதா மேலிடம் சபாநாயகர் பதவிக்கு மணவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வத்தை தேர்வு செய்து அதிகாரப்பூர்வ கடிதம் அளித்தது.

இதையடுத்து சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுவை சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் புதுவை 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வருகிற 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கவர்னர் அன்றைய தினம் 15-வது சட்டப்பேரவையின் பேரவை தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியையும் நிர்ணயித்துள்ளார். சட்டசபை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின்கீழ் நியமன சீட்டுகள் வருகிற 15-ந் தேதி 12 மணி வரை பேரவை செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும்.

நியமன சீட்டுகளை பேரவை செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதுவை சட்டமன்ற சபாநாயகருக்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்காக சட்டமன்றம் கூடி புதுவை சபாநாயகரை தேர்வு செய்கிறது. சபாநாயகர் பதவிக்கு ஒருவருக்கு மேல் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.

தேர்தலை தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் நடத்துவார். குரல் ஓட்டெடுப்பு, ஓட்டுச்சீட்டு என தேர்தல் நடத்தும் முறையை அவரே முடிவு செய்வார்.

ஒருவர் மட்டும் மனுதாக்கல் செய்திருந்தால் அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். 16-ந் தேதி கூடும் சட்டமன்றத்தில் அவர் சபாநாயகராக பதவியேற்பார்.

தேர்தல் முடிவு வெளியாகி 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதுவை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நீண்டநாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News