செய்திகள்
குழந்தை

விருதுநகரில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா

Published On 2021-06-08 05:31 GMT   |   Update On 2021-06-08 05:31 GMT
கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
விருதுநகர்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிய போதும் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையால் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு தொற்று இருப்பது தெரியவர, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு 22-ந்தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தொற்று இல்லை என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டு சாத்தூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஒரு வார ஓய்வுக்கு பின்னர் அந்த பெண் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா சிகிச்சை பெற்ற கர்ப்பிணி என்பதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.



அந்த குழந்தைக்கு மறுநாள் டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குழந்தைக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாக டீன் சங்குமணி தெரிவித்தார்.
Tags:    

Similar News