செய்திகள்
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட சித்தர்காடு பகுதியை சேர்ந்த இளையராஜா மனைவி ராஜகுமாரி(வயது23) தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததாக சி.பி.ஐ (எம்.எல்) கட்சியினர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் வீரசெல்வம், மகாலிங்கம், சிலம்பரசன், ஆனந்தன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.