செய்திகள்
மீன் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வீதிகளில் கொண்டு வரப்படும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளிடம் பெற்று கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மீன்கடையில் மறைத்து வைத்து மீன் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடை உரிமையாளர் கடையின் பின்புறம் மறைத்து வைத்து மீன் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை செய்யப்பட்ட மீன்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், கடை உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.