செய்திகள்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் - மாவட்ட கலெக்டர் லலிதா தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று கடந்த 7-ந் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை மேற்கொள்ள மயிலாடுதுறை அருண் பிரியா நர்சிங் ஹோம், கொள்ளிடம் விஷ்ணு மருத்துவமனை ஆகிய 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா தொற்று சிகிச்சைக்கான செலவினங்கள் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மேற்கண்ட 2 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.