செய்திகள்
ரங்கசாமி

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி- எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

Published On 2021-05-26 11:59 IST   |   Update On 2021-05-26 11:59:00 IST
கொரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளியமுறையில் பதவியேற்பு விழா நடந்தது. முதல்நபராக முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2-ந்தேதி வெளியானது.

வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் துறை சான்றிதழ்களை வழங்கியது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 23 நாட்களாக பதவியேற்கவில்லை.

அதேநேரத்தில் ரங்கசாமி முதல்-அமைச்சராக கடந்த 7-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 9-ந் தேதி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 17-ந் தேதி புதுவை திரும்பினார். டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டு தனிமையில் இருந்தார். இதனால் அவர் வெளியே வரவில்லை.

இதனிடையே தற்காலிக சபாநாயகராக ராஜ்பவன் தொகுதி லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வை பரித்துரைத்து ரங்கசாமி கடந்த 9-ந்தேதி அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை அனுமதியளித்தார்.

இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு விழா இன்று நடந்தது.

காலை 9 மணிக்கு லட்சுமிநாராயணன் கவர்னர் மாளிகைக்கு வந்தார். கவர்னர் மாளிகையின் முதல் தளத்தில் பதவியேற்பு விழா நடந்தது. 9.35 மணிக்கு கவர்னர் தமிழிசை விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.


இதனையடுத்து விழா தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணனுக்கு கவர்னர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உறுதிமொழி ஏற்றுக்கொண்ட லட்சுமி நாராயணனுக்கு கவர்னர் தமிழிசை சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். லட்சுமிநாராயணன் கவர்னருக்கு நன்றி தெரிவித்தார்.

எளிய முறையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மிக குறைந்த அளவிலான பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக சட்டசபையில்தான் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளியமுறையில் விழா நடந்தது. முதல்நபராக முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து பதவியேற்றுக்கொண்டனர்.

இதற்காக மதியம் 12 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களோடு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

Similar News