செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனா பரவலை தடுக்க உரிய நடவடிக்கை இல்லை- பொதுமக்கள் வேதனை

Published On 2021-05-12 07:42 GMT   |   Update On 2021-05-12 07:42 GMT
புதுவையில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா 2-வது அலை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பரவ தொடங்கியது.

தேர்தல் நேரத்தில் படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது தொற்று அதிகரித்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் உறுதியான நடவடிக்கையை எடுக்க முடியாமல் அதிகாரிகள் தயங்கி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்று ஸ்டாலின் பதவியேற்கும் முன்பாகவே சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து பேச தொடங்கினார்.

தொடர்ந்து பதவியேற்றவுடன் உறுதியான முடிவெடுத்து ஊரடங்கை பிறப்பித்தார். கொரோனா நிவாரணமாக இந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து தமிழகத்தில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜனதா கூட்டணி முதல்-அமைச்சராக ரங்கசாமி மட்டும் கடந்த 7-ந் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து கொரோனாவை கட்டுப்படுத்த, தடுக்க ஆலோசனை நடத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றைய தினம் 3 கோப்பில் ரங்கசாமி கையெழுத்திட்டு சென்று விட்டார். அதன்பின் 9-ந் தேதி சட்டசபைக்கு வந்த ரங்கசாமி 20 நிமிடம் மட்டும் பணிகளை கவனித்துவிட்டு வெளியேறிவிட்டார்.

உடல்நலக்குறைவால் பாதித்த அவருக்கு பரிசோதனை நடத்தியபோது கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தாலும், மக்களாட்சி அதிகாரத்துக்கு வராத நிலை உள்ளது. தற்போது புதுவையில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னைக்கு சென்று தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.

புதுவையில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேருவதில்லை. இது, புதுவை மக்களிடையே அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.

புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 26 பேர் இறந்தனர். இதுதான் உச்சபட்ச இறப்பாக இருந்தது. ஆனால், நேற்று முன் தினம் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதில் 14 வயது சிறுமி, 25 வயது கல்லூரி மாணவி உட்பட 14 பெண்களும் அடங்குவர். இதுவரை மாநிலத்தில் ஆயிரத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அரசு பதவியேற்றும் எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லாதது, நிவாரணம் வழங்காதது, மருத்துவக்கல்லூரிகள் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவை புதுவை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
Tags:    

Similar News